ஆலய பூஜைகள் ஆதிசைவர்களுக்கே உரிமையானது

சிவாகமங்களில் இரண்டுவித பூஜைகள் கூறப்பட்டுள்ளன.

  1. ஆத்மார்த்த பூஜை : இப்பூஜையை சிவதீக்ஷை பெற்ற ஓருவர் தன்நலன் கருதி தனது இல்லத்தில் செய்வது ஆகும்.
  2. பரார்த்த பூஜை : இது உலக நலன் கருதி மக்களின் நன்மைக்காக பொது நலன் கருதி, ஆகம விதிப்படி திருக்கோயில்களில் செய்யப்படும் பூஜையாகும்.

கிராமத்திலோ, நகரத்திலோ, வனங்களிலோ, மலைகளிலோ, நதிதீரம் (அ) சமுத்திர தீரங்களிலோ உள்ள ஆலயத்தில் இருக்கும் தெய்வ மூர்த்திகளை ஆகமவிதிப்படி மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்தில் தோன்றிய ஆதிசைவ சிவாசாரியார்களைக் கொண்டு பூஜிப்பது பரார்த்த பூஜையாகும்.

பரார்த்த பூஜை முன்று வகைப்படும்

  1. நித்ய பூஜை : திருக்கோயில்களில் நாள்தோறும் செய்யப்படும் பூஜையாகும்.
  2. நைமித்திக பூஜை : திருக்கோயில்களில் மாதந்தோறும் நடைபெறும் விசேஷ பூஜைகள் மற்றும் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்றவைகளாகும்.
  3. காம்ய பூஜை : திருக்கோயில்களில் பக்தர்களின் வேண்டுதல்களில் படியும்,விருப்பத்தின்படியும் செய்யப்படும் பூஜையாகும்.

இதில் பரார்த்த பூஜை என்று அழைக்கப்படும். கோயில்களில் செய்யப்படும் ஆலய பூஜையை வழிவழியாகச் செய்யும் உரிமை ஆதிசைவர்களுக்கே உள்ளது. இதனை, சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்,

       ’தெரிந்துணரின் முப்போதுஞ் செல்காலம் நிகழ்காலம்

       வருங்கால மானவற்றின் வழிவழியே திருதொண்டில்

       விரும்பிய அர்ச்சனைகள் சிவ்வேதியர்க்கே உரியன

       அப்பெருந்தகையார் குலபெருமையாம் புகழும்

       பெற்றியதோ’

என்று பாடிகிறார்.

அதாவது சிவாலய பூஜைகள் ஆதிசைவ சிவாசார்யார்களுக்கே உரிமையுடையது என்பதை ‘அர்ச்சனைகள் சிவ்வேதியர்க்கே உரியன’ என்று ஏகாரம் இட்டு சேக்கிழார் வலியுறுத்துகிறார். மேலும், செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் என்று பிரித்துக் கூறி எக்காலத்திலும் வாழையடி வாழையாக ஆதிசைவ சிவாசாரியார்களுக்கே பூஜைகள் செய்யும் உரிமை உண்டு எனவும் உறுதிபடக் கூறுக்கிறார்.

மேலும், ‘சைவ சமய நெறி’ என்னும் நூலில் ஸ்ரீ மறைஞானசம்பந்தர்,

     ’சிவன் முகத்திலே மேலும், ‘சைவ சமய நெறி’ என்னும் நூலில் ஸ்ரீ மறைஞானசம்பந்தர்,

     ’சிவன் முகத்திலே யுதித்த விப்ரசைவர்

       இவரே யருச்சனைக் கென்றென்’ (பாடல் – 435)

என்று பாடியுள்ளார். அதாவது சிவன் முகத்தில் தோன்றிய விப்ர சைவர்களுக்கே (ஆதிசைவர்களே) அர்ச்சனை செய்யும் உரிமை உண்டு என்கிறார். மேலும், ஸ்ரீ மறைஞானசம்பந்தர் அதே நூலில்,

     ’அயன் முகத்தில் தோன்றிய அந்தணர் அர்ச்சித்துப்

       பயனடைதற் இட்டலிங்கம் பாங்கு’ – என்று பாடுகிறார்.

அதாவது பிரம்மனின் முகத்தில் தொன்றிய பிராமணர்கள் மற்றும் அடியார்கள் உள்ளிட்ட மற்றவர்கள் ஆத்மார்த்த பூஜை செய்யவே உரிமை உண்டு. இவர்களுக்கு கோயில்களில் பூஜை செய்யவோ, கும்பாபிஷேகம், உத்ஸவங்கள் போன்ற விசேஷங்கள் செய்யவோ உரிமை இல்லை என்று பாடியுள்ளார்.

இதன்மூலம், சிவன் முகத்தில் தோன்றிய ஆதிசைவர்களே ஆலய பூஜைகள், கும்பாபிஷேகம் முதலியன செய்ய உரிமையுடையவர் என்பதை மறைஞானசம்பந்தர் உறுதியாகக் கூறுவதை காணலாம்.

இவ்வாறு, ஆதிசைவ சிவாசாரியாரைக் கொண்டு சிவபூஜை, கும்பாபிஷேகம், உத்ஸவங்கள் செய்யாமல் பிராமணர்கள் உள்ளிட்ட மற்றவர்களைக்கொண்டு செய்தால் ஏற்படும் பாதிப்புகளை திருமூலர் தாம் அருளிய திருமந்திரத்தில்,

     ’பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

       போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

       பார் கொண்ட நாட்டுக்குப்  பஞ்சமுமாம் என்றே

       சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே’ என்று பாடியுள்ளார்.

அதாவது, சிவபெருமானால் அருள்ப்பட்ட சிவாகம மந்திரங்களை அறிந்த ஆதிசைவ சிவாசாரியாரை தவிர்த்து, மற்றவர்களைக் கொண்டு சிவாலய பூஜைகள், கும்பாபிஷேக கிரியைகள் செய்தால், நாட்டின் அரசன் வலிமை இழப்பான். நாட்டில் மழை வற்றும். பஞ்சம் ஏற்படும் என்று எங்கள் அருளாசிரியர் நந்தியம் பெருமான் உரைத்ததாக நாயன்மாரும், முழு முதற் சித்தருமாகிய திருமூலர் கூறிகிறார்.

எனவே சிவாகமம் அறிந்த ஆதிசைவ சிவாசாரியார் செய்யும் பூஜையே நலத்தையும், வளத்தையும் கொடுக்கும் என்பது இதன் உட்பொருளாகும். ஆகமங்களும் மேற்கண்ட கருத்துக்களையே வலியுறுத்துகின்றன.

மகுடாகமத்தில்,

     ’விப்ரக்ஷதரிய விட்சுத்ர: திக்ஷீதாஞ்ச ப்ரவேசகா:

       ஆத்மார்த்தயஜனம் குர்யு: ந குர்யஸ்து ப்ரார்த்தகம்’ – என்று கூறுப்பட்டுள்ளது.

அதாவது பிராமணர், அரசர், வணிகம், வேளாளர்கள் ஆகியோர் சிவதீக்ஷை பெற்று ஆத்மார்த்த பூஜை செய்யவே அதிகாரம் உண்டு. திருக்கோயில்களில் பூஜை, கும்பாபிஷேகம், உத்ஸவ விழாக்கள் செய்ய அதிகாரம் இல்லை என்று ஆகமம் கூறுகிறது. இதன்முலம் பிராம்மணரும், தீக்ஷை பெற்ற அடியார்களும் கோயில்களில் பூஜை, கும்பாபிஷேகம் செய்யக் கூடாது என்பது ஆகம முடிவாகும்.

திருவிளையாடல் புராணம், இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலத்தில், சோமவாரவிரத மகிமை கூறுப்பட்டுள்ளது. அதில், ”சிவபெருமானை தீண்டி பூஜிக்கும் அருகரல்லாத வேத அந்தணர் மற்றும் தீக்ஷை பெற்ற சைவர்கள் இட்டலிங்கம் எனும் ஆன்மார்த்த லிங்கத்தை பூஜை செய்து சோமவாரவிரதம் செய்க என்றும், ஆன்மார்த்த பூஜைக்கு உரிமையில்லாதவர் சிவபிராமணராகிய ஆதிசைவரைக் கொண்டு பூஜை செய்வித்து இவ்விரதம் கொள்க”  என்றும் கூறப்பட்டுள்ளது.

     ’ஆதியில் விலிங்கந் தீண்டற் கருகரல்லாத வேத

       வேதியர் முதலோ ரிட்ட விலிங்த்தில் விதியாலர்ச்சித்

       தோதிய விரத நோற்க வர்ச்சனைக்குரிய ரல்லாச்

       சாதியர் பொருணேர்ந்து ஆதிசைவராற் பூசை செய்தல்’

இதிலிருந்து வேத பிராமணர், மற்றும் தீக்ஷை பெற்ற சைவர்கள் யாவரும் ஆன்மார்த்த பூஜை செய்யலாமேயொழிய திருக்கோயிலில் லிங்கத்தைத் தீண்டி பூஜை செய்தல் கூடாது என்பது அர்த்தமாகிறது. ஆதிசைவ சிவாசாரியார்கள் பிராமணர் உள்ளிட்ட நான்கு பிரிவினர்களில் ஒருவரா என்றால் இல்லை என்பதாகும். ஏனெனில் ஸ்மார்த்த வழிவந்த வைதீக பிராமணர்கள் வேறு, ஆகம வழிவந்த ஆதிசைவ சிவசாரியார்கள் என்பவர்கள் வேறு.

வேத பிராமணர் பிராம்மனின் முகத்தில் தோன்றியவர்கள். ஆதிசைவ சிவாசாரியார்கள் சிவசிருஷ்டியாளர்கள். அதாவது, சிவபெருமானின் திருமுகத்திலிருந்து உதித்தவர்கள். எனவேதான், சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய ஆதிசைவ சிவசாரியார்களே திருக்கோயிலில் பூஜைகள், கும்பாபிஷேகம் ஆகியவை செய்ய வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

மேலும், பொருளாசை காரணமாகவோ, அல்லது துவெஷம் காரணமாகவோ, பிராமணர், அடியார் உள்ளிட்ட மற்றவர்கள் கோயில்களில் சிவத்தை தீண்டுவதாலும், பூசிப்பதாலும் அதைச் செய்வோர், செய்விப்போர் இருவருக்கும் தேவலோகத்துவ தோஷம் பிடிக்கும். மீறி செய்வாராயின் அவ்விடத்து அரசருக்கும் பொது மக்களுக்கும் கெடுதி உண்டாகும். அதுவும் ஆகம விதியை மீறினவன் அவன்மட்டுமன்றி அவனுடைய இருபத்தோரு வம்சமும் வம்சாவளியும் தீராத கோர நரகத்துக்கு உள்ளாவார்கள் என்று ஆகமம் சொல்கிறது.

மேலும், ”ரெளரவாகமம்” ,

     ’ஆதிசைவனே கர்த்தாவ்யம் ஆத்மார்த்த ச பரார்த்தகம்’

என்றுரைக்கிறது.

அதாவது, ஆதிசைவனே தன் அளவில் ஆத்மார்த்த பூஜையும், திருக்கோயில்களில் பரார்த்த பூஜையும் செய்ய வேண்டியவர், உரிமை உடையவர் என்று ஆகமம் கூறுகின்றது.

மேலும், ”காமிகாமம்” ,

        ’ஆதிசைவ குலெஜாத: ஸ்ரேஷ்டஸ்யாது ஸ்தாப நாதிஷு’

என்கிறது.

அதாவது, ஆதிசைவ சிவாசாரியார்களே பிரதிஷ்டை கும்பாபிஷேக கிரியைகள் செய்ய வேண்டும் என்று உறுதிபட காமிகாமம் கூறுகின்றது.

மேலும், ”சுப்ரபேத ஆகம’த்தில்,

     ’திக்ஷிதானாம் த்விஜாதீனாம் ஆத்மார்த்த மனு லோமினாம்

       பரார்த்தம் ஆதிசைவானாம் ஆத்மார்த்த ஸஹிதம் பவேத்’

அதாவது, சிவதீஷை பெற்ற பிராமணர், அடியார் உள்ளிட்ட அனைவரும் ஆத்மார்த்த பூஜை மட்டுமே செய்யலாம். ஆதிசைவர்களே ஆத்மார்த்த பூஜை, பரார்த்த பூஜை என இரண்டும் செய்ய உரிமை உடையவர்கள் என்று அர்த்தமாகும்.

திருநாகைக்காரோணம் புராணத்தில், திருவாவடுதுறை ஆதினம் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், ‘ பெருமறை உடன் ஆகமம் முழுதுணர்ந்தார் ‘ என்னும் பாடலில், ஆதிசைவர்கள் சிவபெருமான் திருமுகத்தில் அவதரித்தவர்கள் என்றும், ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இருபூஜைகளும் செய்யும் பூரண உரிமை உடையவர்கள் என்றும் பாடியுள்ளார்.

இதே கருத்தையே காளையார் கோயிற் புராணம்,

     ”பொதுமையுஞ்சிறப்புமென்னப் புராதனன் புகன்றவாய்மை

       முதுமறையாக மங்கண் முழுதுமோர்ந்தென்றும் பூசை

       பதியுமான்மார்த்தத்தொடு பரார்த்தத்தும்புரி இத்தலைக்கோர்

       மதிபெறும் ஆதிசைவர் “ –என்றும்,

திருப்பெருந்துறைப் புராணம்,

     ’மறையுடனாகம்முணர்ந்த மாட்சியர்

       பொறையொடான் மார்த்த பரார்த்த போற்றுவார்

       அறைபெறும் புகழ்மிகும் ஆதிசைவர்’  - என்றும்,

கண்ட்தேவிப் புராணத்தில், ‘எண்ணில்வேதாக மங்களைய’ என்னும் பாடலும், திருக்குடந்தைப் புராணம், ‘வெள்ளியங்கயிலை விமலனார் மொழிந்த’ என்ற பாடலும் வலியுறுத்துகின்றன.

ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்கள் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இரு விதத்திலும் சிவபெருமானை பூஜிக்கும் உரிமை பெற்றவர்கள் என்று மேற்கண்ட அத்தனை தலப்புராண பாடல்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன.

திருக்கோயில்களில் சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி பூஜித்து வழிபடும் உரிமை ஆதிசைவருக்கே உரியது. இதனை ஸ்ரீ சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகை தேவாரத்தில், ’முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்’ என்று பாடியுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்,

     ”எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து

       மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே

       அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்

       முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராம் முனிவர்”

என்கிறார்.

மேற்படி பாடலில் சேக்கிழார் பெருமான் ஆதிசைவரை முதற்சைவர் என்று குறிப்பிடுவது முக்கியத்துவம் பெறுகிறது.

அகத்தடிமைப் பணி (அ) அகம்படித்திருத்தொண்டு

அகத்தடிமைப் பணி (அ) அகம்படித் திருத்தொண்டு என்பது கருவறையில் சிவபெருமானைத் தீண்டி பூஜிக்கும் செயலைக் குறிப்பதாகும். ஆதிசைவருக்கே லிங்க திருமேனியை  தீண்டி பூஜிக்கும் உரிமையை சைவசமயம் அளித்துள்ளது.

ஆதிசைவராகிய புகழ்த்துணை நாயனாரை பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான்,

     ”செருவிலிபுத் தூர்மன்னுஞ் சிவமறையோர் திருக்குலத்தோர்

       அருவரைவில் லாளி தனக்கு அகத்தடிமை யாம்தனக்கு

       ஒருவர்தமை நிகரில்லார் உலகத்துப் பரந்தோங்கிப்

       பொருவாரிய புகழ்நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்”.

என்ற பாடியுள்ளார்.

திருத்தொண்டர் புராணம் சாரத்தில் உமாபதி சிவாசாரியார்,

     ”புண்ணியர்கள் புகழ் அழகார் திருப்பத்தூர்வாழ்

       புகழ்ந்துணையார் அகத்தடிமை புனிதர்” என்று பாடியுள்ளார்.

ஸ்ரீசுந்தரர் தமது தேவாரத்தில் புகழ்துணை நாயனாரை பற்றிப் பாடும் பொழுது,

     ’அகத்தடிமை செய்யும் அந்தணர் தான் அரி

              சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்,

       மிகத்தளர் வெய்திக் குட்த்தையும் நும்முடி

              மேல்விழுந் திட்டு நடுங்குதலும்

       வகுத்தவ னுக்கு நித்தற் படியும்

              வரும்என் றொருகாசினை நின்ற நன்றிப்

       புகழ்த்துணை கைப்புகச் செய்து கந்தீர்

              பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனிரே’  -என்று பாடியுள்ளார்.

இவ்வாறு, தேவார திருமுறைகளில் ஆதிசைவராகிய புகழ்துணை நாயனாரைப் பற்றி பாடியருளும் பொழுது மட்டுமே அகத்தடிமை பணியை, அகத்தடிமை திருத்தொண்டு பற்றி பாடப்பட்டிருப்பதன் மூலம் ஆதிசைவர்களுக்கே கருவரை சென்று பூஜைகள், கும்பாபிஷேகம், உற்சவங்கள் செய்யும் உரிமை உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

சிவாகமம் அறிந்த ஆதிசைவ சிவாசாரியாரைக் கொண்டு செய்யும் பூஜைகள், கும்பாபிஷேகங்கள் மூலமே, அதைச் செய்தோர், செய்வித்தோர் இருவரும் சுப பலனையும், சிவ புண்ணியத்தையும் முழுமையாக அடைய முடியும். உலகத்திற்கு நன்மை உண்டாக்கும். நீர்வளம், நிலவளம் முதலியன செழுமையுடன் விளங்கும், காரண ஆகமமும்,

‘ஆதிசைவஸ்ய பூஜாம் ஸர்வஸித்திகரம் ஸ்மருதம்’ என்று கூறுகின்றது

அதாவது, ஆதிசைவர்கள் செய்யும் பூஜைகள் உலகத்துக்கு நலத்தையும், வளத்தையும், கீர்த்தியையும், பயனையும் தருவதாகும் என்பது இதன் உட்பொருளாகும்.

திருவாவடுதுறை ஆதினம் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தாம் பாடிய ’சிவாலய தரிசன விதி’யில், ஆதிசைவர்களைக் கொண்டே ஆலய்த்தில் வழிபாடு செய்யவேண்டும் என்பதை,

’இருகரங் குவித்துட் புக்காங் கிலங்க நின்றாடு மையர்

பொருவில் குஞ்சிதத்தாள் போற்றிப் புண்ணியச் சிவபிரான்முன்

மருவியங் காதிசைவன் மலர்க்கையி ன்னைத்து நல்கி

யொருவற வனையான் செய்யும் உபசாரம் அனைத்து நோக்கி’

என்று பாடியுள்ளார்.

சைவ சித்தாந்த தத்துவத்தில் ஒரு பொருளை நிரூபணம் செய்ய மூன்று நிலைகளைக் கொண்டு ஆராயப்படும். அவை,

  1. காட்சி (பிரத்யட்ச பிரமாணம்)
  2. கருதல் (அனுமானப் பிரமாணம்)
  3. உரை (ஆகமப் பிரமாணம்)

இந்த மூன்று நிலைகளில், ஆஅதிசைவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பரார்த்த பூஜைக்கு அருகரல்லர் என விதித்த நூல் வழக்காலும்,

வழிபடும் ஏனையோரைக் காட்டிலும் மூர்த்தியைத் தீண்டி வழிபாடு செய்வார் உயர்ந்தவராதல் வேண்டுமெனக் கருதலளவையாலும்,

தாம் கொடுக்கும் திருநீற்றை யாவரும் இருகரங்களையும் நீட்டி ஏற்கக் காணும் காட்சி அளவையாலும்,

ஆதிசைவ சிவாசாரியார்களுக்கே பரார்த்த பூஜை, கும்பாபிஷேகம் போன்ற கிரியைகள் செய்ய பூரண உரிமை உள்ளது என்பது தெரியவரும்.

சிவபெருமான் விரும்புவது ஆகம பூஜைகளையே. எனவேதான் சிவபெருமான் தனது திருமுகங்களில் இருந்து ஆகமங்களை உபதேகம் செய்து, அந்த ஆகம விதிப்படி பூஜைகளைச் செய்ய, தனது திருமுகத்திலிருந்தே ஆதிசைவர்களைத் தோற்றுவித்து தம் திருமேனியைத் தீண்டும் அதிகாரத்தை சிவவேதியர்களாகிய ஆதிசைவ குலத்திற்கே தந்துள்ளார்.

எனவே, ஆதிசைவ சிவாசாரியார்களைக் கொண்டே ஆகம விதிப்படி ஆலங்களில் பூஜைகள், விழாக்கள், கும்பாபிஷேகங்கள் போன்றவை செய்யப்படவேண்டும். இதை எல்லாம் உணர்ந்தே பண்டைய அரசர்கள், முப்போதும் திருமேனி தீண்டுவாராகிய ஆதிசைவ சிவாசாரியார்களுக்கு பரார்த்த பூஜையை பரம்பரை பாத்தியங் கொடுத்துப் பாராட்டினார்கள்.

 

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!